lingam saivasiddhantam natarajar science siva

கிரியை - Kriyai

Stage - 2 - கிரியை - Kriyai

Adiyar doing Kiriyai.

Sariyai | kiriyai | yogam | gyanam

இனி, புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டானும் சிவபிரானது அருஉருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, பூவும் நீரும் ஆனைந்தும் புகையும் ஒளியும் திரு வமுதும் முதலிய பொருள்களைச்சேர்த்துக் கொண்டு ஐவகைச் சுத்திகளைச் செய்து, இலிங்கத்தில் அகத்தும் புறத்தும் மந்திரங்களால் ஆசனம் முதலியவைகளைக் கண்டு, சிவபிரானை வருவித்தல் (ஆவாகனம்) முதலியவைகளைச் செய்து, நீராட்டுதல்,ஒற்றாடை சாத்துதல் முதலாகத் திருமேனியைத் தீண்டிச் செய்யும் பணிவிடைகளாகிய அணுக்கத் தொண்டாகும். இதனை,

"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்"    (தி. 4. ப. 3. பா. 1)
"போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்"
(தி.4 ப.3 பா.1)
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே.       
(தி. 4. ப. 31. பா. 4)
நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் வார முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலால்கோயிலில்லை ஐயன்ஐ யாற னார்க்கே           
(தி. 4. ப. 40. பா. 8)
நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையும் எல்லம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே (தி. 4. ப. 92. பா. 10)

என்பன முதலிய திருப்பாடல்கள் விளக்கும்.

காயமே கோயி லாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே துய்மை யாக மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே.         
(தி. 4. ப. 76. பா. 4)

என்னும் திருப்பாடல், அகப் பூசையைச் சிறப்பாக விளக்குவது. அகப் பூசை புறப்பூசைகளில் அட்ட புட்பம் (எட்டுப் பூக்கள்) சாத்துதல் என்பது சிறப்பாகச் சொல்லப்படுவது. அதனை ஒரு திருப்பதிகம் முழுவதும் அப்பர்பெருமானார் அருளியுள்ளார்.

"எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
 மட்ட லரிடு வார்வினை மாயுமால்"                 (தி. 5 ப. 54 பா. 1)

எனத் தொடங்குவது அத்திருப்பதிகம். ஆனைந்து (பஞ்ச கௌவியம்) ஆடுவதில் சிவபிரான் மிக்க விருப்பம் உடையவன் என்பதை நாயனார் பல இடங்களில் எடுத்தோதி அருளுவார்.

"ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்" (தி. 4 ப. 11. பா. 2)
"பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே"
   (தி. 4. ப. 63. பா. 9)
"பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
 ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
 மேவ ராய்மிக வும்மகிழ்ந்துள்குமின்"
   (தி. 5 ப. 99. பா. 1)
"ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி"   (தி. 6 ப. 57. பா. 1)
என்பவற்றை எடுத்துக்காட்டாகக் காணலாம்.  இன்னும்,
"நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்"    
(தி. 6 ப. 52. பா. 5)
"நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல
               நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
 சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்
               திருமூலட் டானத்தெம் செல்வன் தானே"          
(தி. 6 ப. 30. பா. 5)

என்றற் றொடக்கத்துத் திருப்பாடல்கள், கிரியையாகிய வழிபாட்டினை நன்கு வலியுறுத்துவனவாம்.

இங்ஙனம் பூவும் நீரும் பிறவுங் கொண்டு சிவபெருமானைப் பூசிக்குங்கால், இன்றியமையாது வேண்டப்படுவது, உள்ளத்துள் இருக்கும் அன்பே என்பதையும், `அவ்வன்பு இல்லாது புறத்தோற்றத் திற்கு மாத்திரம்பூசிப்பவரது பூசையைச் சிவபிரான் எள்ளி நகையாடி, ஆங்கு வருவதற்கு அருவருப்புக் கொண்டு அப்பாலே ஒதுங்கி நிற்கின்றான்' என்பதையும் நாயனார் அருளிச் செய்திருத்தல் பெரிதும் போற்றி உணர்தற்குரியது.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.        (தி. 5 ப. 90.பா. 9)
என்னும் திருக்குறுந்தொகைப் பாடலைக் காண்க.

`சரியையில் நின்று வழிபடுவோர்க்கச் சிவபெருமான் இலிங்கத் தில் மறைத்து நின்று அருள் செய்கின்றான்' எனவும், `கிரியையில் நின்று வழிபடுவார்க்கு, விறகில் மறைந்து நிற்கின்ற நெருப்பும், பாலில் மறைந்துநிற்கின்ற நெய்யும் அவைகளைக் கடையுங்காலத்து வெளிப்படுதல் போல, மந்திர நியாசங்களைச் செய்யுங்கால் அவற்றில் வெளிப்பட்டு நின்று அருளுவன்' எனவும் சாத்திரம் கூறும். அதனை,

விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.    (தி. 5 ப. 90. பா. 10)
என்னும் திருக்குறுந்தொகை பாடலே நமக்கு அருளுகின்றது.

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விசேட, நிர்வாண தீக்கைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)

ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.

சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம்.

Kriyai is the second stage in the spiritual Life. As one matures in Sariyai, like a fruit which ripens on the tree but is not yet ready to fall off, the soul seeks a greater longing to be one with the Supreme consciousness, and Sariyai falls short on this. Kriyai is characterized by a combination of external worship to a deity and worship to the Divinity within. In this stage, the devotee is advancing from worshipping a concrete form to realizing that form within and consequently reduces the amount of time spent for the external worship of the deity, making way for internal worship. This internal worship is in the form of chanting of the mantras, often silently. This helps calm the constant chatter of the mind and to go more silently inwards. Often, a spiritual master, a Guru, is needed in this stage to guide the devotee towards the correct “Aientheluthu” (The holy five letters) mantras to use.  In this stage the devotee feels increasingly closer to the Divine, as it starts to blossom within.


bot About Us | Policy | Contact Us | ©2021 Saiva Siddhanta
Back to Top