lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : சாதனவியல்
              எண்: 11    எட்டாஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. மன்னவன்தன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்(து)அவனை அறியாது மயங்கி நிற்பப்
பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப்
பெருமையொடும் தானாக்கிப் பேணு மாபோல்
துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத்
துணைவனையும் அறியாது துயருறும்தொல் லுயிரை
மன்னும்அருட் குருவாகி வந்(து)அவரின் நீக்கி
மலம்அகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன். 253

2. உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம்
உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர்
நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்ம மாயை
நிற்கும்முத லிருவர்க்கு நிராதார மாகிக்
கரையில்அருட் பரன்துவிதா சத்திநிபா தத்தால்
கழிப்பன்மலம் சகலர்க்குக் கன்ம வொப்பில்
தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித்
தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா சத்திநிபா தத்தால். 254

3. பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும்
படிநயனத் தருள்பரிசம் வாசகம்மா னதமும்
அலகில்சாத் திரம்யோக மௌத்தி ராகி
அநேகமுள அவற்றினௌத் திரிஇரண்டு திறனாம்
இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தால்
இயற்றுவது கிரியைஎழிற் குணட்மண்ட லாதி
நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதான் இன்னும்
நிர்ப்பீசம் சபீசமென இரண்டாகி நிகழும். 255

4. பாலரொடு வாலீசர் விருத்தர்பனி மொழியார்
பலபோகத் தவர்வியாதிப் பட்டவர்க்குப் பண்ணும்
சீலமது நிர்ப்பீசம் சமயா சாரம்
திகழ்சுத்தி சமயிபுத் திரர்க்கு நித்தத்(து)
ஏலுமதி காரத்தை இயற்றித் தானும்
எழில்நிரதி காரையென நின்றிரண்டாய் விளங்கும்
சாலநிகழ் தேகபா தத்தி னோடு
சத்தியநிர் வாணமெனச் சாற்றுங் காலே. 256

5. ஓதியுணர்ந் தொழுக்கநெறி இழுக்கா நல்ல
உத்தமர்க்குச் செய்வதுயர் பீசமிவர் தம்மை
நீதியினால் நித்தியநை மித்திககா மியத்தின்
நிறுத்திநிரம் பதிகார நிகழ்த்துவதும் செய்து
சாதகரா சாரியரும் ஆக்கி வீடு
தருவிக்கும் உலோகசிவ தருமிணியென் றிரண்டாம்
ஆதலினான் அதிகாரை யாம்சமயம் விசேடம்
நிருவாணம் அபிடேகம் இவற்றனங்கு மன்றே. 257

6. அழிவிலாக் கிரியையினான் ஆதல்சத்தி மத்தான்
ஆதல்அத்து வாசுத்தி பண்ணிமல மகற்றி
ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம்
உதிப்பித்துற் பவந்துடைப்பன் அரன்ஒருமூ வர்க்கும்
வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள்
கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி
கருதுகலை சத்தியின்கண் சத்திசிவன் கண்ணாம். 258

7. மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி
மருவும்மந் திரமிரண்டு பதங்கள் நாலேழ்
அந்தநிலை யெழுத்தொன்று புவனம் நூற்றெட்(டு)
அவனிதத் துவமொன்று நிவிர்த்திஅயன் தெய்வம்
வந்திடுமந் திரம்இரண்டு பதங்கள் மூவேழ்
வன்னங்கள் நாலாறு புரம்ஐம்பத் தாறு
தந்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று
தரும்பிரதிட் டாகலைமால் அதிதெய்வம் தானாம். 259

8. வித்தையின்மந் திரமிரண்டு பதம்நா லைந்து
விரவும்எழுத் தேழுபுரம் இருபத் தேழு
தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வம்
தாவில்உருத் திரனாகும் சாந்தி தன்னில்
வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று
வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகும்
உத்தமமாம் தத்துவமும் ஒருமூன் றாகும்
உணரில்அதி தேவதையும் உயரீச னாமே. 260

9. சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்கள்
தாம்மூன்று பதமொன்(று)அக் கரங்கள்பதி னாறு
வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்க ளிரண்டு
மருவும்அதி தேவதையும் மன்னுசதா சிவராம்
ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள்
எண்பத்தொன் றக்கரங்கள் ஐம்பத்தொன் றாகும்
ஆய்ந்தபுரம் இருநூற்றோ டிருபத்து நாலாம்
அறிதருதத் துவம்முப்பத் தாறுகலை ஐந்தே. 261

10. மூன்றுதிறத் தணுக்கள்செயும் கன்மங் கட்கு
முன்னிலையாம் மூவிரண்டாம் அத்து வாவின்
ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித்(து)
அரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித்
தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத்
துகளறுத்தங் கத்துவாத் தொடக்கறவே சோதித்(து)
ஏன்றஉடற் கன்மம்அந பவத்தினால் அறுத்திங்(கு)
இனிச்செய்கன் மம்மூல மலம்ஞானத் தால்இடிப்பன். 262

11. புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப்பொருளை மிகத்தௌ¤ந்தும் சென்றால் வைசத்
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர். 263

12. இம்மையே ஈரெட்டாண் டெய்திஎழி லாரும்
ஏந்திழையார் முத்தியென்றும் இருஞ்சுவர்க்க முத்தி
அம்மையே யென்றமுத்தி ஐந்து கந்தம்
அறக்கெடுகை யென்றும்அட்ட குணமுத்தி யென்றும்
மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும்
விவேகமுத்தி யென்றும்தன் மெய்வடிவாம் சிவத்தைச்
செம்மையே பெறுகைமுத்தி யென்றும்செப் புவர்கள்
சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் கியாமே. 264

13. ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள்
ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னில்
இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி
நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல்
ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே
அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும். 265

14. அருமறையா கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான்
அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள்
தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளிவில்
தர்க்கமொடுத் தரங்களினாற் சமயம்சா தித்து
மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம்
மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம்
சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை
சொல்லுவார்த் மக்கறையோ சொல்லொ ணாதே. 266

15. வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ ரிண்டும்
ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது நீள்மறையி னொழிபொருள்வே தாந்தத்
தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல்
திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும் . 267

16. சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனமொன்றி லேசீவன் முத்த ராக
வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து
முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி. 268

17. இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா
முதன்மைஅனுக் கிரகமெல்லா மியல்புடையான் இயம்பு
மறைகளா கமங்களினான் அறிவெல்லாந் தோற்றும்
மரபின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும்
முறைமையினால் இன்பத்துன் பங்கொடுத்த லாலே
முதன்மையெலாம் அறிந்துமுயங் கிரண்டு போகத்
திறமதனால் வினைஅறுக்குஞ் செய்தி யாலே
சேரும்அனுக் கிரகமெலாம் காணுதும்நாம் சிவற்கே. 269

18. சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய
சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் விதமாம்
முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி
முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபத மென்பர். 270

19. தாதமார்க் கம்சாற்றிற் சங்கரன்தன் கோயில்
தலம்அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப்
போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித்
தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும்
செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் செய்வ(து)
யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும்
இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசனுல கிருப்பர். 271

20. புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது
புகையொளிமஞ் சனம்அமுது முதல்கொண் டைந்து
சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாம்
சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலும்இக் கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர் நினையுங் காலே. 272

21. சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும்
சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள்
அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்
கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் டலத்தின்
முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி
முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்
உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர். 273

22. சன்மாக்கம் சகலகலை புராண வேத
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே. 274

23. ஞானநூல் தனையோதல் ஓது வித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம்
ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம்
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம். 275

24. கேட்டலுடன் சிந்தித்தல் தௌ¤த்தல் நிட்டை
கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்
வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவி னோர்கள்
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்(கு)
ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம்
இனிதுநுகர்ந் தரனருளால் இந்தப் பார்மேல்
நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால்
ஞானநிட்டை அடைந்தவர் நாதன் தாளே. 276

25. தானம்யா கம்தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள்
சாந்திவிர தம்கன்ம யோகங்கள் சரித்தோர்
ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர்
ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
ஒடுங்கும்போ தரன்முன்நிலா தொழியின்உற்ப வித்து
ஞானநெறி அடைந்தடைவர் சிவனை அங்கு
நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற் றாளே. 277

26. சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் நிகழ்ந்து
பவமாயக் கடலின்அழுந் தாதவகை எடுத்துப்
பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னினும்சா ராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே. 278

27. ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமஞ்சொல்ல அல்லவா மென்னும்
ஊனத்தா ரென்கடவர் அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான்
ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல்
அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி யாகும்
ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்
இறைவனடி ஞானமே ஞான மென்பர். 279

28. சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசாவந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத்
தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும்
தொல்லுலக மெல்லாம்தன் னுள்ளே தோன்றும்
நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும்
நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து தோன்றும். 280

29. மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாதம்
மேவுதலும் ஞானம்விளைந் தோர்குருவின் அருளால்
புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள்
பூதலத்தில் புகழ்சீவன் முத்த ராகித்
தக்கபிரி யாப்பிரிய மின்றி ஓட்டில்
தபனியத்தில் சமபுத்தி பண்ணிச்சங் கரனோ(டு)
ஒக்கவுறைந் திவர்அவனை அவன்இவரை விடாதே
உடந்தையாய்ச் சிவன்தோற்ற மொன்றுமே காண்பர். 281

30. அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே
அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து
குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில்
பிரியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி
நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே. 282

31. புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன். 283

32. ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு
நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை
சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்
செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை
கோலமிலை புலனில்லை கரண மில்லை
குணமில்லை குறியில்லை குலமு மில்லை
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப்
பாடலினொ டாடலிவை பயின்றிடினும் பயில்வர். 284

33. தேசமிடம் காலம்திக் காசனங்க ளின்றிச்
செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் செய்தங்(கு)
ஊசல்படு மனமின்றி உலாவல் நிற்றல்
உறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தல்
மாசதனில் தூய்மையினின் வறுமை வாழ்வின்
வருத்தத்தில் திருத்தத்தில் மைதுனத்தில் சினத்தின்
ஆசையினின் வெறுப்பின்இவை யல்லாது மெல்லாம்
அடைந்தாலும் ஞானிகள்தாம் அரனடியை அகலார். 285

34. இந்நிலைதான் இல்லையேல் எல்லா மீசன்
இடத்தினினும் ஈசனெல்லா விடத்தினினும் நின்ற
அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி
அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து
மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்ற னாலே
மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத்
துன்னியசாக் கிரமதனில் துரியா தீதம்
தோன்றமுயல் சிவானுபவம் சுவானுபூ திகமாம். 286

35. சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோ(டு)
அனுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே. 287

36. கருவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார்
காணாதார் கன்னிகைதான் காமரசங் காணாள்
மருவிஇரு வரும்புணர வந்த இன்பம்
வாயினாற் பேசரிது மணந்தவர்தாம் உணர்வர்
உருவினுயிர் வடிவதுவும் உணர்ந்திலைகாண் சிவனை
உணராதார் உணர்வினால் உணர்வதுகற் பனைகாண்
அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந்தங் கறிவர்
அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் அறாதே. 288

37. பன்னிறங்கள் அவைகாட்டும் படிகம்பால் உள்ளம்
பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசுபார்த் திட்(டு)
இந்நிறங்கள் என்னிறம்அன் றென்று தன்றன்
எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் வேறாய்ப்
பொய்ந்நிறஐம் புலன்நிறங்கள் பொய்யெனமெய் கண்டான்
பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை
முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி
முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னீங்கா முறைபோல். 289

38. எங்குந்தான் என்னினாம் எய்த வேண்டா
எங்குமிலன் என்னின்வே றிறையு மல்லன்
அங்கஞ்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்(து)
அவயவங்கள் கண்போலக் காணா ஆன்மா
இங்குநாம் இயம்புந்தத் துவங்களின் வைத்தறிவ(து)
இறைஞானந் தந்துதா ளீதல்சுட ரிழந்த
துங்கவிழிச் சோதியும்உட் சோதியும்பெற் றாற்போல்
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிவன் காணே. 290

39. பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கிஅது விடுமபொழுதிற் பரக்கும்
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்
நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
ஆசையொடும் அங்குமிங்கு மாகிஅல மருவோர்
அரும்பாச மறுக்கும் வகை அருளின்வழி யுரைப்பாம். 291


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top