lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : சாதனவியல்
              எண்: 12    ஒன்பதாஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று)
அறிந்தகல அந்நிலையே யாகும் பின்னும்
ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலா மோட. 292

2. வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்
நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே
காதலினால் நான்பிரம மென்னு ஞானம்
கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண்(டு)
ஓதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம்
ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே. 293

3. கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில்
கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள்
மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க
வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச்
சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி
தவிராது மலமிதுவும் பசுஞான மாகும்
அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங்(கு)
அறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே. 294

4. சிவனைஅவன் திருவடிஞா னத்தாற் சேரச்
செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம்
அவனையணு காவென்றும் ஆத லானும்
அவனடிஅவ் வொளிஞான மாத லானும்
இவனுமியான் துவக்குதிர மிறைச்சி மேதை
என்புமச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
அவமகல எனையறியேன் எனும்ஐய மகல
அடிகாட்டி ஆன்மாவைக் காட்ட லானும். 295

5. கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா
கரணங்கள் தமைக்கான உயிருங் காணா
உண்டியமர் உயிர்தானுந் தன்னைக் காணா(து)
உயிர்க்குயிராம் ஒருவனையுங் காணா தாகும்
கண்டசிவன் தனைக்காட்டி உயிருங் காட்டிக்
கண்ணாகிக் கரணங்கள் காணமல் நிற்பன்
கொண்டானை உளத்திற்கண் டடிகூடிற் பாசம்
கூடாது கூடிடினும் குறித்தடியின் நிறுத்தே. 296

6. குறித்தடியின் நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி
கோகனதன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம்
வெறுத்துநெறி அறுவகையும் மேலொடுகீ ழடங்க
வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ ழில்லான்
நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு
நினைப்பரியான் ஒன்றுமிலான் நேர்படவந் துள்ளே
பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே
புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே. 297

7. கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக்
கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த
தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே
சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
பண்டைமறை களும்அதுநா னானே னென்று
பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே. 298

8. அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும்
அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு)
அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி
ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் சித்(து)
அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி
அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று)
அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன்
அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே. 299

9. நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய்
ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய்
மூட்டுமோ கினிசுத்த வித்தைமல ரெட்டாய்
முழுவிதழ்எட் னக்கரங்கள் முறைமையினின் உடைத்தாய்க்
காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும்
கலாமூர்த்த மாம்இவற்றின் கண்ணாகுஞ் சத்தி
வீட்டைஅருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி
மேலாகி நிற்பன்இந்த விளைவறிந்து போற்றே. 300

10. அந்தரியா கந்தன்னை மத்திசா தனமாய்
அறைந்திடுவர் அதுதானும் ஆன்மசுத்தி யாகும்
கந்தமலர் புகையொளிமஞ் சனம்அமுது முதலாக்
கண்டனஎ லாம்மனத்தாற் கருதிக் கொண்டு
சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால்
சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க
வந்திடும்அவ் வொளிபோல மருவிஅர னுளத்தே
வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே. 301

11. புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில்
பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு
சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச்
சிந்திக்கும் படிஇங்குச் சிந்தித்துப் போற்றி
அறமபாவங் கட்குநாம் என்கடவே மென்றும்
ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென் னாதே
திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ
சீரடியார் தம்முடைய செய்தி தானே. 302

12. இந்தனத்தின் எரிபாலின் நெய்பழத்தின் இரதம்
எள்ளின்க ணெண்ணெயும்போல் எங்குமுளன் இறைவன்
வந்தனைசெய் தெய்விடத்தும் வழிபடவே அருளும்
மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற்
சிந்தனைசெய் தர்ச்சிக்க சிவன்உளத்தே தோன்றித்
தீஇரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப்
பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் னுருவப்
பரப்பெல்லாங் கொடுபோந்து பதிப்பனிவன் பாலே. 303


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top