lingam saivasiddhantam natarajar science siva

தமிழர் திருமணம்

கட்டுரை

தமிழர் திருமணம்

ஆசிரியர்:
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

வகை: தத்துவம்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

வாழ்க்கையில் பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு சடங்குகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை பலவிதச் சடங்குகள் மக்கள் இனத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. பலவிதச் சடங்குகளில் திருமணச் சடங்கு மிகப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழர் வாழ்க்கையில் தொல்காப்பியம் மிகப் பழைய கால திருமணச் சடங்கைச் சுட்டுகின்றது. பெரும்பாலோர் இன்று சோதிடம் பார்த்து, பொருத்தங்கள் பார்த்துத் திருமணம் செய்கின்றனர்.


நட்சத்திரப் பொருத்தம், பணப்பொருத்தம், வசியப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், தீர்க்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், ரச்சுப்பொருத்தம், வேதைப்பொருத்தம் ஆகிய பத்துப் பொருத்தங்கள் இன்று பஞ்சாங்களில் உள்ளன. பத்துப் பொருத்தங்களில் தினம், கணம், யோனி, இராசி, ரச்சு, ஆகிய ஐந்தும் முக்கியமானவை. ரச்சுத் தட்டினால் திருமணம் செய்யக்கூடாது.

பத்துக்கு, ஐந்துக்குக் குறையாமல் பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம். இவையல்லாமல் செவ்வாய் திசை, திசா சந்திப்பு முதலியனவும் முக்கிய இடம்பெறுகின்றன. கந்தர்வம், கர்ப்பநிச்சிதம், சகுன நிச்சிதம், குரு தெய்வநியமனம் முதலிய வகையில் பொருத்தம் பாராமல் செய்யலாம் என்ற விதி விலக்கும் உண்டு.

பிறப்பு, குடிமை, ஆளுமை, வயது, வடிவம், நிலையான அன்பு வழிபட்ட காமம், நிறை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து ஒப்புமை வகைகளைத் தலைமக்களுக்குத் தொல்காப்பியர் குறித்துள்ளார். அக்காலத்தில் இப்பத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

ஒத்த அன்புள்ள தலைவனும், தலைவியும் தாமே உடன்போக்கு மேற்கொள்வதையும், பின் திருமணம் செய்து கொள்வதையும்

     “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
      புணர்ந்துடன் போகிய காலையான”

(கரணம்- திருமணச் சடங்கு)

தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

காதலித்து வந்த தலைவியைத் தலைவன் திருமணம் செய்யாமல் கைவிட்ட நிலையும் ஏற்பட்டது. இத்தகுநிலையில் ஆன்றோர் கூடித் திருமணச் சடங்குகளை வற்புறுத்தி மேற்கொள்ளச் செய்தனர்.

     “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
      ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

(ஐயர் – அறிவில் மூத்த சான்றோர்)

என்ற நூற்பாவும் தொல்காப்பியத்தில் உண்டு.

கற்பை நிலை நாட்டும் இல்வாழ்க்கையில் திருமணச் சடங்கு உண்டாயிற்று. திருமணத்தின்போது சடங்குகள் செய்து தலைவியின் பெற்றோர் கொடுப்பத் தலைவனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இன்றைய திருமணச் சடங்குகளிலும் ‘கொடுத்தோம்-கொண்டோம்’ என்ற முறை உள்ளது.

சங்க இலக்கியங்களில் அகநானூற்றில் திருமண முறை விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.

     “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
      பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
      தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
      மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்
      கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
      கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
      கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
      உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்
      பொதுசெய் கம்மலை முதுசெம் பெண்டிர்
      முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
      புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
      வால்இழை மகளிர் நால்வர் கூடிக்
      கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
      பெற்றோர் பெட்கும் பிணையை ஆகுஎன
      நீரொடுசொரிந்த ஈரிதழ் அலரி
      பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
      வதுவை நன்மணம்”

என்பது அகநானூற்றுப் பாடல் பகுதி.

உழுந்தினை மிகுதியாகச் சேர்த்து நன்றாக வெந்த உணவுடன் சோற்றினைக் கூடியிருந்தோர் உண்டனர். ஆரவாரம் உண்டாயிற்று, பந்தலில் வரிசையாகக் கால்கள் நடப்பட்டிருந்தன. பந்தலின் கீழ்த்தரையில் புதுமணலைப் பரப்பினர், மனையில் விளக்கேற்றினர், மாலைகளைத் தொங்கவிட்டனர். இருள் நீங்கிக் காலை நேரம் வந்தது, சந்திரன் தீய கொள்களின் தொடர்பு நீங்கி உரோகினி நட்சத்திரத்துடன் சேரும் நல்ல நேரம் வந்தது. தலையில் மங்கல நீர்க்குடத்தைச் சுமந்தவர்களும், புதிய பாத்திரங்களைக் கையில் கொண்டவரும் ஆனமகளிர் கூடினர்.

பொதுவான ஆரவாரம் மிக்கது. வயதான மகளிர் திருமணத்திற்கு வேண்டியவற்றை முன்னும் பின்னுமாக முறையாகத் தந்தனர். மக்களைப் பெற்ற வயிறு வாய்த்த மங்கல மகளிர் நால்வர் கூடினர். கற்பினில் தவறாமல் கொண்ட கணவனுக்கு நல்ல பல உதவிகளைச் செய்து பெற்றோர்கள் பாராட்டும் சிறப்புடன் வாழ்வாயாக! என்று கூறி நீருடன் சேர்ந்த பூவையும் நெல்லையும் கரிய கூந்தலில் தங்குமாறு தூவினர்.

இவ்வாறு திருமணம் நடைபெற்றது என்பது பாடலின் கருத்தாகும். மற்றொரு அகநானுற்றுப் பாடலிலும் நற்றிணைப் பாடலிலும் திருமணச் சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தூவுவதில், நீர் தூய்மையைக் குறிக்கும். பூ – மங்கலத்தையும் கற்பையும் குறிக்கும். நெல் – உழைப்பையும் எதிர் கால நல்வாழ்வையும் குறிக்கும். இன்று நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி வந்துவிட்டது.

சங்க காலத் திருமணமுறை, சிலப்பதிகாரக் காலத்திலேயே மாறிவிட்டது.

     “மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத்
      தீவலம் செய்து காண்பவர்கள் நோன்பு என்னை-”

என்ற நிலை வந்துவிட்டது. சங்க இலக்கியங்களில் தீ வளர்த்தல், பார்ப்பான் சடங்கு செய்தல் இல்லை. சிலப்பதிகார்த்தில் அவை வந்துவிட்டன.

கொங்குவேள் பெருங்கதையில், அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்த திருமண முறைகளை விரிவாகப் பாடியுள்ளார். சேக்கிழார் பெருமான் பலவிதத் திருமண முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தத் திருமணத்தையும் பாடியுள்ளார்.

திருமருகல் என்ற ஊரில் உடன்போக்கு வந்த தலைவனைப் பாம்பு தீண்டியதால் இறந்துவிட்டான். தலைவி அழுது புலம்பினாள். அங்கு தங்கியிருந்த திருஞானசம்பந்தர்க்குப் புலம்பல் ஒலி அதிகாலையில் கேட்டது. நேராக அடியார்களுடன் அங்கே சென்றார். நடந்ததைக் கேட்டார்.

வைப்பூர் எம்முடைய ஊர், அங்குள்ள தாமன் என் தந்தை, இங்கே உயிர் நீத்துள்ள இவன் என் தந்தைக்கு மருமகன், என்னுடன் பிறந்தவர் அறுவர், மூத்தவளை இவனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தந்தை வாக்களித்திருந்தார். வேறு ஒருவன் பெரும்பொருள் கொடுத்ததால் மூத்தவளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவ்வாறு அறுவரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மனம்தளர்ந்த இவனுடன் நான் உடன்போக்கு வந்தேன். அரவு தீண்டி இறந்து விட்டான். துயர்நீங்க அருள் செய்வீர்! என்று அப்பெண் கூறினாள். ‘சடையாய் எனுமால்’ என்ற பதிகம் பாடினார். விடம் நீங்கி எழுந்தான் அவன்.

     “….அருட்காழிப்பிள்ளையார் அடியில் வீழ்ந்த
      நங்கை அவள்தனை நயந்த நம்பியோடும்
      நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
      மங்குல்தவழ் சோலைமலி புகலிவேந்தர்
      மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்டார்.”

என்பது சேக்கிழார் வாக்கு. எந்தவிதமான திருமணச் சடங்கும் இல்லாமல் திருஞானசம்பந்தர் மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்ட திருமணமுறை சீர்திருத்தத்தில் முன்னோடி முறையாகும். தற்போது பெரிய திருமண மண்டபம் பிடித்துப் பெரும் செலவு செய்து ஐயர்களை வைத்துத் திருமணம் செய்வது பரவலாக உள்ளது. அவர்கள் சொல்லுகின்ற மந்திரங்களின் பொருள் புரியாமல் செய்து வருகின்றனர்.

     “சோமஹ ப்ரமமோ, விவிதே கந்தர்வ
      விவிதே உத்ரஹ, த்ருதியே அக்னிஸ்டே
      பதிஸ துரியஸ்தே, மனுஷ்ய ஜாஹ”
 (சங்கராச்சாரியார்– ‘தெய்வத்தின் குரல்’ – இரண்டாம் பகுதி, பக்கம் 875)

முதலில் சோமன்(சந்திரன்) உன்னை அடைந்தான், இரண்டாவதாகக் கந்தருவன் உன்னை அடைந்தான், மூன்றாவதாக அக்கினி உனக்கு அதிபதி ஆனான். மனித வர்க்கத்தைச் சேர்ந்த நான்காவதாக நான் உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன் – என்பது பொருளாகும்.

கற்பு முதன்மை எனக் கொண்ட தமிழர் வாழ்வில் இத்தகைய மந்திரங்கள் ஓதித் திருமணம் செய்ய வேண்டுமா?

திருமுறைகளிலும் திவ்வியப்பிரபந்தங்களிலும் திருமணம் பற்றிய பாடல்கள் ஏராளமாக உள்ளனவே!

     “குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு;
      குறிப்பினொடும் சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து;
      விரும்பு வரங்கொடுத்து அவளை வேட்டருளிச் செய்த;
      விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர்”

எனத் தொடங்கும் தேவாரப் பாடலைக் கூறி மணம் செய்தால் நன்றாக இருக்கும்.

     “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
      முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
      மைத்துனன் நம்பிமது சூதனன் வந்து என்னைக்
      கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்…”

என்ற சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார் பாடல் திருமணத்தில் ஓதினால் மிக நன்றாக இருக்கும்.


--திருச்சிற்றம்பலம்--


bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top