lingam saivasiddhantam natarajar science siva

வாழ்வியல் சடங்குகளில் திருமுறை மந்திரங்கள்

கட்டுரை

வாழ்வியல் சடங்குகளில் திருமுறை மந்திரங்கள்

ஆசிரியர்:
முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

வகை: தத்துவம்

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு மக்கள் பலவிதப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர். தெய்வ வழிபாடு, வாய்கட்டி வழிபடுதல், இறந்தோரைப் பலவகையான முறையில் அடக்கம் செய்தல் முதலிய சடங்குகள் அக்காலத்தில் இருந்துள்ளன. தொல்காப்பியத்தில் திருமணச் சடங்கு, தெய்வ நம்பிக்கை, நிலையாமை, நடுகல் வழிபாடு முதலியன குறிப்பிடப் பெற்றுள்ளன.

சங்க காலத்தில், கருவாய்க்க வேண்டுமென்று இறைவனை வழிபடுதல் (பரிபாடல் - 8), திருமணச் சடங்குகள் செய்தல் (அகநானூறு - 86), இல்லில் தெய்வம் கொண்டாடுதல் (பட்டினப்பாலை 159,160), இறந்த கணவனுக்கு பிண்டலம் வைத்தல் (புறநானூறு - 234), கடவுளுக்கு பலி கொடுத்தல் (நற்றிணை 358), கணவன் புண் வருத்தம் தீர மனைவி பாடுதல் (மலைபடுகடாம் 302-304), கணவனை இழந்த மகளிர் வளை அணியாமை (புறம் 238, 253), காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கை (குறுந்தொகை 210), குயவன் தெய்வத்திற்க்கு பிலியிடுதல் (நற்றிணை 293), குழந்தைக்கு உணவூட்டுதல் (அகம் 210), கோயில்களில் திருவிழாக் கொண்டாடக் கொடிக் கட்டுதல் (மதுரைக் காஞ்சி 365-366), திருநாளில் ஏழாம் நாள் அந்தியில் தீர்த்தமாடுதல் (மதுரை 427-428), திருவிழாவுக்கு கால் கொள்ளுதல் (கலித்தொகை 83), பிறை தொழுதல் (குறுந்தொகை 179), பேய்க்குப் பலியிடல் (பதிற்றுப்பத்து 71), மகளிர் தெய்வத்தைப் பரசுதல் (அகம் 201), தெய்வத்திற்கு மஞ்சளும் பூவும் அணிதல் (அகம் 269) முதலிய பழக்க வழக்கங்கள் இருந்துள்ளன.

வாழ்வியல் அருளியல் சடங்குகள்:

பண்டைக் காலப் பழக்க வழக்கங்களில் பல சடங்குகளாக மாறி நிலைபெற்றுள்ளன. இச்சடங்குகளைச் செய்த முன்னோர் எவ்வாறு செய்தனர், என்ன சொல்லிச் செய்தனர் என்பதற்கான குறிப்புகள் மிகவும் அருகியே காணப்படுகின்றன. இச்சடங்குகளை இருவகையாகக் கொள்ளலாம். தனிமனித, சமுதாய வாழ்வில் நிகழ்கின்ற வாழ்வியல் சடங்குகள், திருக்கோயில் சார்ந்த திருக்குடநன்னீராட்டு முதலிய அருளியல் சடங்குகள் என்பன அவை.

சடங்குகளுக்கு வேள்வி செய்தல் என்பது பண்டைக்காலத்திலிருந்தே உள்ளது. அதற்கான சான்றுகள் பல உள்ளன. அரசர்கள் பல்வேறு வேள்விகளைச் செய்வித்துள்ளனர். முனிவர்கள் அருந்தமிழ் வேள்வி ஆற்றியுள்ளனர். வேள்விகளில் மந்திர ஆற்றலுடைய பாடல்கள் ஓதப்பெற வேண்டுமென்பதில் இருவேறுபட்ட கருத்தில்லை.

திருமுறைகள் மந்திரங்கள்:

திருமுறைகளில் பலவகைச் சடங்குகள் ஆங்காங்கு சுட்டப்பெற்றுள்ளன. அச்சடங்குகளைச் செய்வதற்குப் பொருத்தமாகத் தனிப்பாடல்களும், பதிகங்களும் திருமுறைகளில் பல உள. திருமுறைகள் மந்திர ஆற்றல் மிக்கவை.

     “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
      மறைமொழி தானே மந்திரம் என்ப”
  (தொல் – பொருள். நு.எ. 480)

எனத் தொல்காப்பியர் மந்திரத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார். இவரைப் போலவே திருவள்ளுவரும்,

     “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும்”
  (திருக்குறள் - 28)

எனக் கூறியுள்ளார். நிறை மொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தே விடும் எனப் பரிமேழலகர் உரை வரைந்துள்ளார்.

திருமுறை ஆசிரியர்கள் நிறைமொழி மாந்தர்களாவர். அவர்கள் கூறிய நிறைமொழி அருளிக் கூறியதாகும். “எனதுரை தனதுரையாக” (திருமுறை 1 – பா.எ. 824) எனத் திருஞானசம்பந்தர் கூறியுள்ளமையால் அவருரைத்த அருள்மொழிகள் அனைத்தும் இறைவனுடைய திருவாக்கே என அறியலாம்.

மூவர் தேவாரங்களும் மந்திர ஆற்றல் உடையவை என்பதைத் தில்லை வாழந்தணர் குலத்தில் தோன்றிய உமாபதி சிவாச்சாரியார் கூறியுள்ளார்.

     “கண்ட பெருமந்திரமே மூவர் பாடல்
      கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்”
  (திருமுறைகண்ட புராணம் பா.எ. 13)

என அவர் கூறியுள்ளது குறிக்கத்தக்கதாகும்.

திருமுறைகள் தமிழ் வேதங்கள்:

திருமுறைகள் தமிழர்தம் மெய்யியல் கொள்கைகளையும், வாழ்வியல் சிந்தனைகளையும் விதந்து கூறுகின்ற தமிழ்வேதங்களாகும். சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களிலும் வேதம் தமிழில் செய்யப் பெற்றதாகக் கூறப்பெறும் மரபு காணப்பெறுகிறது.

     “மறைகளாய நான்குமென மலர்ந்த
      செஞ்சொல் தமிழ்ப்பதிகம்”

     “மிக்க சொற்றமிழினால் வேதமும் பாடினார்”

     “வேதம் தமிழ் செய்தான் மாறன்”

எனவரும் தொடர்கள் இதனை உணர்த்துகின்றன.

எனவே திருமுறைகளே தமிழர்களுக்கு வேதநூல் என்பது பெறப்படுகிறது. திருமுறைகளை ஓதுவதனால் இம்மை மறுமை பயன்கள் அனைத்தையும் எளிதில் பெற முடியும்.

திருப்பதிகங்களை ஓதினால் உண்டாகும் பயன்களைத் திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பில் பலவாறு குறிப்பிட்டுள்ளார்.

     “பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல்லார்கள்
      பூமலி வானவ ரோடும் பொன்னுல கில்பொலிவாரே”
  (திருமுறை 1 பா.எ. 469)

     “சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
      எம்பந்தம் எனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே”
  (திருமுறை 2 பா.எ. 1916)

     “உறும்பொரு ளால்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
      அறும்பழி பாவம் அவலம் இலரே”
  (திருமுறை 3 பா.எ. 4147)

எனவரும் பகுதிகளால் இதனை அறிந்து கொள்ளலாம். தமிழ் மக்கள் பன்னிரு திருமுறைகளையும் ஓதி வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் செய்தும், செய்வித்தும் இறையருளை எளிதில் பெறலாம்.

திருமணம்:

திருமண நிகழ்வுகளில் சடங்குகள் செய்வது மிகப் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது. திருமணத்தை,

     “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
      கொளற்குரி மரபில் கிழவன் கிழத்தியைக்
      கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
  (தொல் – பொருள் – நச்சர் – நூ.எ. 142)

எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். கரணம் என்பது திருமணச் சடங்காகும். கரணமொடு புணர என்பதற்கு வேள்விச்சடங்கோடே கூட என்று நச்சினார்க்கினியார் உரை வரைந்துள்ளார். கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே என்ற தொல்காப்பியரின் கூற்று இன்றும் “கொடுத்தோம் - கொண்டோம்” என்று வழக்கில் உள்ளது.

சங்க இலக்கியங்களில் திருமணச் சடங்குகள் மிக விரிவாகப் பாடப்பெறுற்றுள்ளன.

     “கனையிருள் அகன்ற கவின்பெறு காலை
      ………………………………………………
      வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
      ……………………………………………….
      பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
      நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
      பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
      வதுவை நன்மணம்”
  (அகம் – பா. எ. 86)

என அக்காலத்து நடந்த திருமண நிகழ்வைச் சங்க இலக்கியம் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

     “சாலி ஒருமின் தகையாளைக் கோவலன்
      மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
      
     தீவலம் செய்வது”
  (சிலம்பு – மங்கல வாழ்த்து அடி எண். 51-53)

என இளங்கோவடிகள் கோவலன் கண்ணகி திருமணத்தை வேதவழிப்பட்ட அந்தணர் செய்து வைத்ததைக் காட்டுகிறார். எனவே சங்க காலத்திற்குப் பின்னரே சடங்குகளை அந்தணர் செய்யத் தொடங்கினர் என்பதை அறிய முடிகிறது. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழர் சடங்குகள் தமிழர் அல்லாத பிற இனத்தாரால், தமிழ் அல்லாத பிற மொழியால் செய்விக்கப் பெற்றன என்பது தெளிவுபடுத்தப் பெறுகிறது.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய முத்தமிழ் விரகராகிய திருஞானசம்பந்தர் மீண்டும் தமிழ்வழிச் சடங்குகளுக்குத் தாமே முன்னின்று வித்திடுகிறார். திருமருகல் தலத்தில் அவர் வைப்பூர்தாமன் மகள் திருமணத்தை நடத்துகிறார்.

     “அருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
      நங்கை யவள்தனை நயந்த நம்பியோடு
      நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
      மங்குல் தவழ் சோலைமலி புகலி வேந்தர்
      மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்டார்”
  (பெரியபுராணம் – பா.எ. 2381)

எனச் சேக்கிழார் இத்திருமணத்தை கூறுகிறார். இங்கு திருமணச் சடங்குகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஞானாசாரியர் நடத்தி வைக்கும் திருமணத்திற்குச் சடங்குகள் தேவையில்லை என்பது பெறப்படுகிறது. எனவே இத்திருமணம் எந்தவிதச் சடங்குமின்றி நடந்திருக்குமானால் தமிழகத்தில் நடந்த முதல் சீர்திருத்தத் திருமணம் என்பதில் ஐயமில்லை. சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் “வகுத்து விடுதல் – உலகமுறைப்படி சடங்கு நிகழ்த்தி உழுங்கு செய்தல்” என உரை கூறுகிறார். இக்கருத்துப் பொருந்துமெனில் திருஞானசம்பந்தர் வடமொழி வேதம் நன்கு தெரிந்திருந்தும், தமிழன்றி, வேத வழிபாடு புரியாதவர். ஆதலால் தமிழ்வழியிலேயே திருமணச் சடங்கு நிகழ்த்தினார் என்ற கருத்து மிகத் தெளிவாகும்.

திருமணத்தில் சடங்குகள் மிகவும் முக்கியம். கரணம் தப்பின் மரணம் என்பர். திருமணச்சடங்குகளுக்குத் தேவையான திருமுறைப்பாடல்கள் பல உள.

     “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
      எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
      கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
      பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.”
  (திருமுறை – 3 – பா.எ. 3052)

     “குரும்பை முலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு
      குறிப்பினொடும் சென்று அவள்தன் குணத்தினை நன்கறிந்து
      விரும்பும் வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
      விண்ணவர்க்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர்வினவில்
      அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட
      அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ் அயலின்
      கரும்பருகே கருங்குவளைக் கண்வளரும் கழனிக்
      கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே”
  (திருமுறை – 7. பா.எ.156)

என்பன போன்ற திருமுறைப்பாடல்களை ஓதிச் திருமணச் சடங்குகளைச் செய்யலாம்.

மகப்பேறு – பெயர் சூட்டல்:

மக்கள் பெறுகினற பல பேறுகளில் மிகமுக்கியமானது மகப்பேறாகும். மிகப் பெருஞ் செல்வராய் இருப்பினும் அறிவை இன்பத்தால் மயக்கும் மக்கட்பேறில்லாதவர் வாழ்வு பயனற்றது எனச் சங்கச் சான்றோர் கூறியுள்ளனர். இதனை,

     “படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
      உடைப்பெருஞ் செல்வ ராயினும்
      …………………………………………
      மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
      பயக்குறை இல்லை தாம்வாழு நாளே”
  (புறம் 188)

எனக் கூறியுள்ளமை இதனை உணர்த்தும்.

வள்ளுவனார் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தையே அமைத்துப் பாடியுள்ளார். இவ்வுலகத்தில் பெறுகின்ற பேறுகளில் மக்கட்பேற்றினைச் சுட்டிக் கூறுகிறார்.

பண்டைக் காலத்தில் கருவயிறு வாய்க்கப் பெறாத பெண்டிர் முருகப் பெருமானை வழிபட்டு குழந்தைபேறு அடைந்துள்ளனர். எம்முடைய வயிற்றில் கருப்பம் உண்டாகுக. அங்ஙனம் உண்டானால் இன்னது உனக்குச் செய்வோம் எனப் பெண்டிர் முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடன் பூண்டதை இலக்கியம் குறிப்பிடுகிறது.

     “கருவயிறு உறுகெனக் கடம்படு வோரும்”  (பரிபாடல் – ப.எ. 8)

என்று கூறப் பெற்றுள்ளமை இதனை உணர்த்தும்.

இக்காலத்தில் எண் கணித முறைப்படி குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்துக்களைக் கணக்கிட்டுப் பெயர் சூட்டும் அவலம் தமிழகத்தில் பரவி வருகிறது. இது மிகத் தவறாகும். ஆண் குழந்தைகளுக்குச் சிவபெருமான், முருகன், திருமால், தமிழ்ச்சான்றோர், நாயன்மார் பெயர்களையும், பெண் குழந்தைகளுக்கு உமையம்மை, தமிழ் வளர்த்த பெண்பாற்சான்றோர் பெயர்களையும் சூட்டலாம். வடமொழி, வேற்று மொழிப் பெயர்களைச் சூட்டுதல் கூடாது.

     “நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேரிட்டால்
      நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளில் அழுங்கிப்போம்
      செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால்
      நம்பிகாள் நாரணன் தம் அன்னைநர கம்புகாள்”
  (நாலாயிர திவ்வியபிரபந்தம். பா.எ. 388)

எனப் பெரியாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர்களையே குழந்தைக்கு வைத்தால் பெயர்களைச் சொல்லுகின்ற பெற்றோரும், பெயருடைய குழந்தையும் நன்மையை அடைவர். மனிதப் பெயரிட்டு அழைப்பதைக் காட்டிலும் இறைவன் பெயரிட்டு அழைப்பதே சிறந்தது என்பது பெரியாழ்வாரின் கருத்தாகும்.

இத்தகு மகப்பேறு, பெயர் சூட்டல் சடங்குகளுக்கு வேள்வியில் திருவுருத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் முதலிய தெய்வங்கள் குறித்து ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள், கண்ணனைச் சிறுகுழந்தையாக்கிப் பெரியாழ்வார் பாடிய பிரபந்தப் பாடல்கள் முதலியவற்றை ஓதலாம்.

பூப்பு நீராட்டு:

உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் உடல் சார்ந்த பருவநிலைமாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும். மனித இனத்தில் பன்னிரு வயதில் ஆடவர், மகளிர் இருவருக்கும் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆண் பிள்ளைக்கு இவ்வயதில் குரல் மாறுபாடு அடைகிறது. நெஞ்சுவிரிவடைகிறது, கை கால்கள் நீண்டு உரம் பெறத் தொடங்குகின்றன. ஆடவர்க்கு ஏற்படும் இவ்வுடல் மாற்றங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் சிறப்பாகக் கொள்ளப் பெறவில்லை என்றே கூறலாம். பெண் பிள்ளைகளுக்கு இவ்வயதில் ஏற்படும் உடல்மாற்றம் பூப்புத் தோன்றுதலாகும். இது சிறப்பாகக் கொள்ளப் பெறுகிறது.

உடற்கூற்றின்படி நிகழும் இப்பூப்பு மகளிர்க்கு மங்கலத் தன்மையையும் தெய்வத் தன்மையையும் உண்டாக்குகிறது. இந்நிலையை அடைந்த பெண்ணைப் பாராட்டிச் சீராட்டி மகிழ்கிறோம். மனித இன வளர்ச்சிக்கு அடிப்படை பூப்பு என்பதைக் கருதல் வேண்டும்.

பூப்படைந்த பெண்ணுக்கு உடற்கூறு, உளக்கூறு என்ற இரு கூறுகளும் வளர்ச்சி அடைகின்றன. உடற்கூறாக உடல் அழகு பெறுகிறது. மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றன. கூந்தல் பொலிவு உண்டாகிறது. உளக்கூறாக அச்சம், மடம், நாணம் முதலிய முன்பு இல்லாத பண்புகள் புதிதாகத் தோன்றுகின்றன. குரும்பை முலை மலர்க்குழலி என உடல்சார்ந்த கூறுகளையும், அவள் தன் குணத்தினை நன்கறிந்து என உளம் சார்ந்த கூறுகளையும் சுந்தரர் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

இந்த நல்ல தெய்வீக நிகழ்வினைத் தீட்டு எனக் கருதுதல் தவறாகும். தீட்டாகக் கருதிச் செய்கின்ற சடங்குகளும் பொருளற்றன ஆகும்.

இம்மங்கலச் சடங்கில் திருவெம்பாவை. திருப்பாவை, காசிபாகீரதியம்மை திருவருட்பா, அம்மை பற்றிப் பாடப் பெற்றுள்ள பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்பெறும் நீராடல் பருவங்கள் வேள்விப் பாராயணத்திற்குப் பயன்படும்.

புதுமனை புகுவிழா:

மனித வாழ்வில் உணவு, உடை, இவற்றை அடுத்து அடிப்படைத் தேவையாக விளங்குவது உறையுளாகும். இறைவன், அரசர் முதலியோர் மனைகளைக் கோயில் என்றும், மக்கள் வாழும் இடங்களை வீடு என்றும் கூறுவது மரபு.

புதிதாக வீடு கட்டிக் குடிபுகுமுன் பூசை செய்பவது மிக முக்கியமாகும். குடிபுகும் நாளுக்கு முந்திய நாள் இரவு செய்யப்படும் பூசை நிலத் தேவர் வழிபாடாகும். இது வடமொழியில் வாஸ்த்து சாந்தி எனப்படுகிறது. நாம் இல்லத்தை அமைக்கும் முன் அந்நிலத்தில் பல் வேறு தீய ஆற்றல்கள் குடியிருக்கும். இத்தீய ஆற்றல்களுக்கு உரிய வழிபாடு ஆற்றி இல்லத்தைக் குடியிருப்பதற்குரிய தகுதி உடையதாக ஆக்கிக் கொள்வதே நிலத்தேவர் வழிபாடாகும். இவ்வழிபாட்டுக்கு இருநிலனாய் முதலான தேவாரப் பாடல்களை ஓதலாம்.

காலை வழிபாட்டில் அம்மையப்பரை எழுந்தருளச் செய்து வேள்வி செய்யும் போது முன்னிலைப் பரவலாக உள்ள திருத்தாண்டகங்களை ஓதலாம். சிவ வழிபாட்டில் நவகோள்களுக்கு இடமில்லை. எனவே தனியே நவகோள் வேள்வி, வழிபாடு முதலியன செய்தல் வேண்டா. கோளறு பதிகம், கோளிலிப் பதிகம் முதலியவற்றை ஓதல் நலம் பயக்கும்.

அறுபதாம் அகவை – மணி விழா:

மனித வாழ்வில் அறுபது வயது ஒரு நிறைவினை அடைகிறது. இக்காலத்தில் இது சஷ்டியப்த பூர்த்தி என்னும் பெயரில் கொண்டாடப் பெறுகிறது. இறையருளோடு வாழ்வு அமைவது சிறந்த உயர்நிலைக்கு உரியதாகும். இல்லை எனில் குறிக்கோள் இலாது கெட்டதாய் ஏற்றமின்றி அமையும்.இல்லறமாம் நல்லறத்தில் மக்கட்பேறெய்தி தெய்வ நலம் பேணி, விருந்தோம்பி அறம்பல செய்து திறம்பட வாழ்கின்ற வாழ்வு சிறந்தது.

மாந்தர் அறம்பல செய்வதற்கு நீண்ட ஆயுள் தேவை. இவ்வாழ்வை இறைவன் தந்தருள வேண்டும் என வேண்டுதல் மரபு. இறைவன் மார்க்கண்டனுக்கு நீண்ட வாழ்நாளை அருளினார். காலனை மார்க்கண்டேயர்க்காகக் காய்ந்தனை என்பது சேக்கிழார் வாக்கு, மார்க்கண்டனைப் போல நீண்ட வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத் திருக்கடவூரில் அறுபதாம் அகவை வாழ்வை மக்கள் நடத்துகின்றனர்.

தலைமகனாய் நின்ற தமிழ் ஞானசம்பந்தர் முதலிய அருளாளர்கள் அருளிய பைந்தமிழ் பனுவல்களாகிய திருமுறைகளின் வழி அறுபதாம் அகவை மணி விழாவை நடத்திக் கொள்வது நலம் பயக்கும்.

இவ்வழிபாட்டில் காலனை வென்ற கால காலனையும் கார்த்தியாயனி அம்மையையும் வேள்வி செய்து வழிபடுதல் வேண்டும். இறைவன் யாராலும் செய்ய முடியாத அட்ட வீர்ட்டச் செயல்களைச் செய்தார். அவ்வத்தலங்களுக்குரிய இறைவன் இறைவியை நிறைகுடங்களில் எழுந்தருளச் செய்து வழிபட வேண்டும். அவ்வத்தலங்களுக்குரிய திருமுறைகளை ஓதுதல் நலம் தரும்.

நீத்தார் கடன்:

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திருந்து நீத்தார் கடன் வழிபாடு இருந்து வருகிறது. கற்பதுக்கை, கல்திட்டை, முதுமக்கள் தாழி முதலியன இறந்தவர்க்கு அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் ஆகும்.

     “சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
      தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்”
  (மணிமேகலை – சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை)

எனச் சீத்தலைச் சாத்தனார் இறந்த உடலை அடக்கம் செய்யும் முறை பற்றிக் கூறுகிறார்.

உடல் வேறு; உயிர் வேறு என்ற கொள்கை சங்க காலத்திலிருந்து தமிழ் மக்களின் சமய நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் அழியும் உயிர் அழியாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். “வீயாது உடம்பொடு நின்ற உயிருமில்லை” (புறம் – பா.எ. 363). என்பதனால் இதனை அறியலாம். இறந்த உயிர் தான் செய்த வினைக் கேட்ப மீண்டும் பிறக்கும். பிறந்து இறந்து துன்பமடையும். உயிர் இறைவன் திருவடி அடைதலே சமய வாழ்வின் இறுதிநிலையாகும். இது வீடுபேறு என்றும் முத்தி என்றும் கூறப்பெறுகிறது.

     “துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு
      இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறிவந்து
      பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
      மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே”
  (திருமுறை – 4 – பா.எ. 1067)

எனத் திருநாவுக்கரசர் பிறப்பு இறப்பு பற்றிக் கூறுகிறார்.

பன்னிருத் திருமுறைகளிலும் பிறப்பு இறப்பு பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. உயிக்குச் சடங்கு செய்வது உயிர் நற்கதி பெற வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே ஆகும். திருக்கடவூர் மயானம், திருநாலூர் மயானம், சேத்திர வெண்பா, திருப்பொற்சுண்ணம், வாழாப்பத்து, நீத்தல் விண்ணப்பம், நால்வர் இறுதிப் பதிகங்கள் முதலியன இவ்வழிபாட்டிற்கு உரியனவாகும்.

அனைத்துச் சடங்குகளையும் திருமுறைப்படி செய்வதே சாலச் சிறந்ததாகும். திருமுறைகளைச் சடங்குகளில் ஓதும் போது ஓசை ஒலியெலாம் ஆனாய் என்பதற்கேற்ப எங்கும் பரவி நற்பயன் தரும். இறைவன் அட்ட மூர்த்தியானவன். அட்ட மூர்த்த வடிவில் ஒன்று நெருப்பு. நெருப்பின் முன் திருமுறை கூறுவது ஏற்புடையதே.


--திருச்சிற்றம்பலம்--


bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top