lingam saivasiddhantam natarajar science siva

அமர்நீதி நாயனார் - Amaraneedi Nayanar

நயன்மார்கள்

அமர்நீதி நாயனார் - Amaraneedi Nayanar

குரு பூசை
ஆனி - பூரம்


<< Previous || Next >>


அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி,மக்கள்,சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.

குருபூசை: ஆனி - பூரம்


அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன் – திருத்தொண்டத்தொகை

காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் சோழநாட்டின் சிறந்த ஊர்களில் ஒன்று பழையாறை ஆகும். அவ்வூரில் சிவன் கழலையே சிந்தை செய்யும் சீலர் அமர்நீதியார் பிறந்தார். கீளும், கோவணமும் அடியார்களுக்குத் தரும் பணி செய்தார். திருநல்லூரில் திருமடம் அமைத்துச் சுற்றத்தாருடன் அங்கு குடிபுகுந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது அளித்துத் தொண்டு செய்தார். ஒரு நாள் இறைவன் அவர் பெருமையை உலகிற்கு உணர்த்த விரும்பித் திருமடம் வந்தார். மறையவர் வடிவில் வந்த அவர் தாம் கொண்டு வந்த தண்டில் இரு கோவணங்களைக் கட்டியிருந்தார். அவற்றில் ஒன்றை கொடுத்து விட்டு இதன் பெருமையெல்லாம் உமக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை; பத்திரமாக வைத்திரு என்றார். பின்னர் காவிரியில் நீராடச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மழையில் நனைந்த படி வந்தார். தாம் தந்த கோவணம் வேண்டுமென்றார். 


நாயனார் எங்கும் தேடியும் கோவணம் இல்லை. புதியது தந்தும் வேதியர் ஏற்கவில்லை. தமது கோவணத்திற்கு ஒத்தது தாரும் எனக் கூறித் தராசில் இட்டார். நாயனார் ஒரு கோவணத்தை மற்ற தட்டிலிட்டார். நேர்படவில்லை. அனைத்துக் கோவணங்களையும் இட்டார். பொன்னும், மணியும் இட்டார். உடைமைகள் அனைத்தும் இட்டார். நேர் பெறவில்லை. இறுதியில் நாயனார் நல்லூர்ப் பெருமானை வேண்டிக் குடும்பத்துடன் தராசில் ஏறினார். தராசு நேர்நின்றது. இறைவன் திருக்காட்சி நல்கினான். தம்மைத் தொழுது கொண்டே இருக்கும் சிவபதம் தந்தருளினான்.


அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.
வரலாறு
வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.
அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.
சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.
இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில்  உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.
அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

நுண்பொருள்
இறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அதன் பின்னாகவே இக்கருமத்தைச் செய்யும், தில்லைவாழந்தணரை நம் தலைவராகக் கொள்ளுதல் நன்று, அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ? அவர்தம் உடைமையே அனைத்துமென்று அவர் வேண்டுவதெல்லம் இல்லையென்னாது கொடுப்பதும் (இயற்பகை) அவரை மகேசுவரராகப் பூசித்தலும் (இளையான் குடிமாறர்)அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் (மெய்ப்பொருள் நாயனார்) இறைவனைத் தொழமுன் அவர்களைக் கும்பிடுவதும் (விறன்மிண்டர்) ஆதிய இவையெல்லாம் எதற்கு. என்பர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது. வேதப் பொருளான சிவனும் சிவனடியார்களும் ஒரே நிறை என்பதே அவ்விடை.
அமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம்.bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top