lingam saivasiddhantam natarajar science siva

இளையான்குடிமாறார் - Ilayankudi Maranar

நயன்மார்கள்

இளையான்குடிமாறார் - Ilayankudi Maranar

குரு பூசை
ஆவணி - மகம்


<< Previous || Next >>


வறுமையிலும்,நள்ளிரவி லும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்

குருபூசை: ஆவணி - மகம்


“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை. 

இளையான் குடியில் தோன்றியவர் மாறநாயனார். உழவுத் தொழில் புரிந்தவர். அதனால் நிறைந்த செல்வம் பெற்றவர். சிவனடியார் யாவராயினும் கைகுவித்து வணங்கிச் செவியில் இனிய சொல் கூறி மனைக்கு அழைத்துச் செல்வார். அடியவர் பாதம் கழுவி இருக்கையில் இருத்திப் போற்றுவார்.பின்னர் நான்குவித உணவுகளை அறுசுவைகளில் அளித்து மகிழ்வார். செல்வம் உள்ள காலத்தில் மட்டுமின்றி வறுமை வந்த காலத்தும் இப்பணியை இடைவிடாது செய்ய வல்லவர் என உலகிற்கு அறிவிக்க இறைவன் எண்ணினான். செல்வம் எல்லாம் சென்று மறைந்து வளம் சுருங்கினாலும் மனம் சுருங்காத மாறனார் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். மழைக் காலத்து இரவில் இறைவன் முனிவர் வேடம் கொண்டு மாறனார் மனைக்கு வந்தார். 


அவர் உடம்பின் ஈரத்தை நாயனார் துடைத்தார். மனைவியாரை நோக்கி அமுது செய்ய வழி என்ன எனக் கேட்டார். பகலில் விதைத்த நெல்லை வாரிக் கொண்டு வந்தால் அமுதாக்கலாம் என்றார் அம்மையார். பெரிதும் மகிழ்ந்து உள்ளம் அன்பால் நிறையப் பெரிய கூடையை எடுத்துக் கொண்டு பறவைகள் படுத்துறங்கும் வயலுக்குச் சென்றார் மாறனார். காரிருள் ஆகையினால் காலினால் தடவிச் சென்று கைகளால் மழைநீரின் வழிச் சார்ந்திருந்த நெல்லினை எடுத்து வந்தார். வீட்டின் கூறையை விறகாக்கி அமுது சமைத்தனர். கீரையைப் பறித்துக் கறியாக்கினர். உறங்கிக் கொண்டிருந்த அடியவரை எழுப்பி அமுது செய்ய வேண்டினர். இறைவன் பெரும் சோதியாய்த் தோன்றினார். உம் மனைவியோடு எம் பேருலகில் குபேரன் ஏவல் செய்ய இனிதிருப்பீர் என அருளிச் செய்தான்.


இளையான்குடி மாறநாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். இவரது அவதாரத் தலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி ஆகும்.
மாறநாயனார் புராணக் கதைச் சுருக்கம்
இளையான்குடியில் பிறந்த மாறனார் உழவுத்தொழிலில் வந்த பெருஞ் செல்வமும், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் உடையவராய்த் திகழ்ந்தார். சிவனடியார் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறி வரவேற்று அவர்களுக்கு உணவளிப்பார். நாள்தோறும் செய்த மாகேசுவரபூசை என்னும் சிவபுண்ணியத்தால் அவரது செல்வம் நாளுக்குநாள் பெருகிக் குபேரனைப் போன்ற பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார்.

அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்யவல்லார் இந்நாயனார் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்த இறைவன் திருவுள்ளங் கொண்டார். இதனால் இளையான்குடிமாறனாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கினாலும், தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்.

இவ்வாறு மாரிக்காலத்தில் ஒருநாள், தாம் உணவின்றிப் பசியால் வாடியபோதும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவுப் பொழுதிலே சிவபெருமான் அடியார் கோலங்கொண்டு மாறனாரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்று இருத்தற்கு இடங்கொடுத்தார்; அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என வருத்தம் மிகுந்தது. அன்றையப் பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க விறகில்லாமல் வீட்டின் சிதலமடைந்த கூரையிலிருந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து மாறனாரும் அவரது துணைவியாரும் சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான் சோதிப்பிழம்பாய் எழுந்து தோன்றினார். அது கண்டு மாறனாரும் மனைவியும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, ‘அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ உன் மனைவியோடும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக’ என்று அருள் செய்து மறைந்தருளினார்.

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top